இரண்டு ஆண்டுகள் வரையில் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தரக் கூடாதா?

0
260

இரண்டு ஆண்டுகள் வரையில் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தரக் கூடாதா?

குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை முழுமையாக பாலூட்டும் படி இறைவன் தன் திருமறையில் கூறியிருக்கின்றான். அப்படியானால் இரண்டு ஆண்டுகள் வரையில் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தரக் கூடாதா? இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பாலூட்டுவது ஹராமாகுமா?

பி. அப்துர்ரஹ்மான், கோடம்பாக்கம்


பதில் : 

குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று திருக்குர்ஆன் 2:233மற்றும் 31:14 ஆகிய வசனங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது என்று எந்த நிபந்தனையும் இல்லை. பிறந்த குழந்தைக்கு நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று கொடுத்துள்ளார்கள்.

நான் (எனது மகன்) அப்துல்லாஹ் பின் ஸுபைரை (மக்காவில்) கருவுற்றிருந்தேன். கர்ப்பக் காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டு மதீனா வந்தேன். (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனைப் பெற்றெடுத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் அவனைக் கொண்டு சென்று அவர்களுடைய மடியில் அவனை வைத்தேன். பிறகு அவர்கள் பேரீச்சம்பழம் ஒன்றைக் கொண்டு வரும் படிக் கூறி,அதை மென்று அவனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீர் தான் அவனது வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனது வாயினுள் வைத்துத் தேய்த்து விட்டார்கள். பிறகு அவனுக்காக துஆச் செய்து, இறைவனிடம் அருள் வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன் தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான்.

அறிவிப்பவர்: அஸ்மா (ரலி),

நூல்: புகாரி 3909

போதிய அளவு தாய்ப்பால் சுரக்காத பெண்களும் உண்டு. இவர்கள் வேறு உணவுகளை வழங்குவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாலூட்டுவது ஹராம் என்று கூற முடியாவிட்டாலும் பாலூட்டும் பருவம் இரண்டு ஆண்டுகள் என்று திருக்குர்ஆன் கூறுவதால் அத்துடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுவது தான் சிறந்தது.


கேள்வி-பதில்- ஏகத்துவம்,ஜனவரி 2005 

பகிர்